அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில்… வரலாற்றில் மறக்க முடியாத மிக முக்கியமான நாள் இது… நடிகர் ரஜினி பேட்டி.!!
அயோத்தியில் இன்று நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இந்த நிகழ்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்ட சடங்குகள் செவ்வாய்க்கிழமை முறைப்படி தொடங்கின. மைசூரை அடிப்படையாகக் கொண்ட ஸ்தபதி (சிற்பி) அருண் யோகிராஜ் வடிவமைத்த ஸ்ரீராமர் சிலைதான் பிரதிஷ்டை செய்வதற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் 12.20 மணிக்கு கோயில் கருவறையில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்நிகழ்வில் பல முக்கியபிரமுகர்கள் கலந்துகொள்ளும் நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்காக ரஜினிகாந்த் அயோத்திக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “ராமஜென்ம பூமிக்கு செல்வதில் மகிழ்ச்சியாக உள்ளேன். 500 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த ஒரு பிரச்சினை இது. உச்சநீதிமன்றம் இதற்கு தீர்வு கொடுத்தது. தற்போது அது நிறைவேறியிருக்கிறது. இந்த நாள் வரலாற்றில் மறக்க முடியாத முக்கியமான நாள்” என்றார்.