Motivation Story: `உங்க கனவை மறந்துடாதீங்க!’ – மந்திரமான மனைவியின் சொல்… 3 ஆஸ்கர் வென்ற ஆங் லீ!
மூன்று ஆஸ்கர் விருதுகளைப் பெற்றவர் ஆங் லீ (Ang Lee). அமெரிக்க திரைப்படத்துறையில் ஒரு சீனர் கால்பதித்து, வெற்றிகளைக் குவிப்பது சாத்தியமே இல்லை’ என்கிற மாயையை அடித்து நொறுக்கியவர். அவருடைய
Crouching Tiger, Hidden Dragon’, Hulk’,
Life of Pi’ போன்ற படங்களெல்லாம் இன்றளவும் உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுபவை. எப்படிச் சாதித்தார் ஆங் லீ?
1949-ம் ஆண்டு மெயின்லேண்ட் சீனாவிலிருந்து தைவானுக்கு இடம்பெயர்ந்தது ஆங் லீயின் குடும்பம். 1954-ம் ஆண்டு தைவானிலிருக்கும் ஒரு சிறு கிராமத்தில் பிறந்தார் லீ. அவர் படித்ததெல்லாம் தி புரொவின்ஷியல் தைனான் ஃபர்ஸ்ட் சீனியர் ஹை ஸ்கூல்’ (The Provincial Tainan First Senior High School) என்ற பள்ளியில். அந்தப் பள்ளியின் பிரின்ஸிபால் அவருடைய அப்பா.
வாத்தியார் பிள்ளை மக்கு’ என்ற சொலவடை தமிழகத்தில் உண்டு. பிரின்ஸிபால் மகன் நன்றாகப் படிக்கவில்லையென்றால் எப்படி… அதனாலேயே, ஆங் லீ நன்றாகப் படிக்க வேண்டும், நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று விரும்பினார் அப்பா. சதா படிப்பு, படிப்பு, படிப்பு. வேறு எதிலும் லீயின் கவனம் சென்றுவிடாமல் பார்த்துக்கொண்டார். அதுவே லீக்கு வெறுப்பைத் தந்தது. இளம் பருவத்தில் எந்தக் குழந்தைக்குத்தான் பாடம் பிடிக்கும்?
அப்பாவுக்கு, ஆங் லீ ஒரு கல்லூரி புரொபசர் ஆக வேண்டும் என்று ஆசை. அதற்கு நேரெதிர் எண்ணம்கொண்டவராக இருந்தார் லீ. வலிந்து திணிக்கப்படும் எந்த விஷயமும் தலையில் ஏறாது என்பது யதார்த்தம். இலக்கியம், நாடகம் இவற்றின் மேல் அவருடைய நாட்டம் சென்றது. சீனக் குடியரசில் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க வேண்டுமா… அதற்கு ஒரு விதி வைத்திருந்தார்கள். ஜாயின்ட் யூனிவர்சிட்டி என்ட்ரன்ஸ் எக்ஸாம்’ என்ற ஒரு நுழைவுத்தேர்வை வைத்திருந்தார்கள். அதில் தேர்ச்சியடைந்தால்தான் பல்கலைக்கழகத்துக்குள்ளேயே நுழைய முடியும். பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தால்தான் புரொபசர் ஆக முடியும். இரண்டு முறை அந்தத் தேர்வை எழுதினார் ஆங் லீ. இரண்டு முறையும் ஃபெயில். அப்பா நொந்துபோனார்.
தலைகீழா தண்ணி குடிச்சுப் பார்த்தாலும், இந்தப் பிள்ளைக்கு ஒண்ணும் ஏற மாட்டேங்குதே…’ என்று துவண்டுபோனார். பிறகு, தைவானில் இருக்கும் நேஷனல் ஆர்ட்ஸ் ஸ்கூலில் சேர்ந்தார் லீ. அங்கும் அவருடைய நாடகப் பைத்தியம் அவரை விட்டபாடில்லை. இசைக்குழு, நாடகக்குழு எங்கே இருக்கிறது என்று தேடித் தேடிப் போனார். கதை, நடிப்பு, நாடகம், சினிமா… என்பதே அவருடைய கனவாக இருந்தது.
அது 1978-ம் ஆண்டு. ஆங் லீக்கும், அவருடைய அப்பாவுக்கும் அன்றைக்கு காரசார வாக்குவாதம். வீட்டில் மேசையில் அமர்ந்து ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்துகொண்டிருந்தார் லீ. அப்பா வந்தார். பார்த்தார். “என்ன செய்யறே?’’ என்று கேட்டார்.
“அமெரிக்காவுல இருக்குற யூனிவர்சிட்டி ஆஃப் இல்லினாய்ஸ்ல ஒரு ஃபிலிம் கோர்ஸ் இருக்குப்பா. அதுக்கு அப்ளை பண்ணப்போறேன்.’’
“நீ உன் மனசுல என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கே… நான் உன்னை பெரிய புரொபசராக்கணும்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். நீ என்னடான்னா சினிமா, நடிப்பு அது இதுன்னுக்கிட்டு உன் இஷ்டத்துக்குப் போறியே?’’
“அப்பா… எனக்குத்தான் அந்தப் படிப்பு வரலையேப்பா. என் இஷ்டத்துக்கு விடுங்களேன். எனக்குப் பிடிச்சதைப் படிச்சு, அதுலயே நான் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்துக்குறேனே…’’
“பெரியவங்க சொல்றதைக் கேட்காத பிள்ளை எப்பிடி வளரும்… அந்த யூனிவர்சிட்டி பத்தி எனக்கும் தெரியும். அங்கே இருக்குறது கொஞ்சம் சீட்டுதான். ஆயிரக்கணக்கான பேர் அப்ளை பண்ணுவாங்க. உனக்கு இடம் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அதுக்கப்புறம் உன் விருப்பம்…’’ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்.
அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. அவரை மீறி ஃபிலிம் கோர்ஸுக்கு அப்ளை செய்வது அவரை இன்னும் கோபப்படுத்தத்தான் செய்யும். ஆனால் ஆங் லீக்கு வேறு வழி தெரியவில்லை. யூனிவர்சிட்டி ஆஃப் இல்லினாய்ஸுக்கு அன்றைக்கே விண்ணப்பத்தை அனுப்பிவைத்தார்.
`எல்லா செயல்வீரர்களும் கனவு காண்பவர்களே!’ – அமெரிக்க இசை விமர்சகர் ஜேம்ஸ் ஹியூன்கெர் (James Huneker)
விண்ணப்பத்தை அனுப்பிய கையோடு தன் கனவை ஆரம்பித்துவிட்டார். அமெரிக்கா, சீனாவைப்போல் இல்லை. திரைத்துறையில் அவர் போன்ற திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொட்டிக்கிடக்கும் தேசம். ஹாலிவுட்… அந்தப் பெயரே அவருக்கு ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
- ஆங் லீ, அப்பா சொல்லச் சொல்லக் கேட்காமல் அமெரிக்காவுக்குப் போனார். இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். நடிக்க வேண்டும், பெரிய நடிகனாக வேண்டும் என்பதுதான் ஆரம்பத்தில் அவருடைய லட்சியமாக இருந்தது. அதற்கு அவருக்குப் பெரும் தடையாக இருந்தது ஆங்கில மொழி. எவ்வளவு முயன்றும் அவரால் சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியவில்லை. “சரியா இங்கிலீஷ் வார்த்தையே வர மாட்டேங்குது. இதுல எப்பிடி நீ பெரிய வசனமெல்லாம் பேசி நடிப்பே… ஒரு டயலாக்குக்கு பத்து பதினைஞ்சு டேக் எடுத்தேன்னு வையி… நீ இங்கே நடிக்கவே முடியாது’’ என்று சக மாணவர்கள் பயமுறுத்தினார்கள். அது உண்மை என்றும் அவருக்குப் புரிந்தது. ஸ்கிரிப்ட், டைரக்ஷன் இவற்றில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
அமெரிக்காவில், இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதுதான் ஒருநாள் ஜேன் லின்-ஐ (Jane Lin) சந்தித்தார் ஆங் லீ. பார்த்ததுமே பிடித்துப்போகும் சிநேகமான முக பாவம். எளிமை. ஜேன் லின்னும் தைவானைச் சேர்ந்தவர். தன்னுடைய முனைவர் பட்டப்படிப்புக்காக அவர் அந்தப் பல்கலைக்கழகத்துக்கு வந்திருந்தார். இருவரும் பேசினார்கள். பழகினார்கள். காதலித்தார்கள். திருமணமும் செய்துகொண்டார்கள்.
இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தை முடித்தார் லீ. பிறகு, நியூயார்க்கில் இருக்கும் டிஸ்ச் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் (Tisch School of the Arts) சேர்ந்தார். அங்கே ஃபிலிம் புரொடக்ஷன் படிப்பில் MFA பட்டம் பெற்றார். படிப்பு முடிந்தது. வாழ்க்கை தன் கண்ணாமூச்சி விளையாட்டை ஆரம்பித்தது. அடுத்து… அடுத்து என்ன? இந்தக் கேள்வி ஆங் லீயைத் துரத்த ஆரம்பித்தது. படிப்பு முடிந்ததும் அவருக்கு திரைப்பட வாய்ப்பு தேடி வந்துவிடவில்லை. மாறாக கிடைத்த சினிமா சார்ந்த வேலைகளையெல்லாம் பார்க்கத் தொடங்கினார். டிஸ்ச் ஸ்கூலில் அவருடன் படித்தவர் ஸ்பைக் லீ (Spike Lee). அவர் தயாரித்த படத்தில் கூட்டத்தோடு கூட்டமாக பல வேலைகளைப் பார்த்தார். எடிட்டருக்கு அசிஸ்டன்ட், ஸ்கிரிப்ட் அசிஸ்டன்ட் என என்னென்னவோ வேலைகள்.
வேலையில்லாத அந்த நாள்களில் அப்பாவை நினைத்துக்கொண்டார் ஆங் லீ. அப்பா ஏன் தன்னை சினிமா கோர்ஸில் சேர வேண்டாம் என்று சொன்னார் என்பது புரிந்தது. அமெரிக்க திரையுலகில் ஓர் இளம் சீன மனிதனால் பெரிய வெற்றிகளைப் பெற முடியாது என்பதை அப்பா உணர்ந்திருந்தார் என்பதும் புரிந்தது. ஆனாலும், தன் கனவைக் கைவிடுவதற்குத் தயாராக இல்லை லீ.
`கனவு காணும்போது ஒரு மனிதன் மேதையாகிறான்.’ – பிரபல ஜப்பானிய இயக்குநர் அகிரா குரோசாவா (Akira Kurosawa)
ஆங் லீக்கு படிப்பு முடிந்து ஆறு ஆண்டுகள் போராட்டமான வாழ்க்கையாக அமைந்தது. வேலை இல்லை. அதற்காக சும்மா உட்கார்ந்துகொண்டிருக்கவும் முடியாது. கல்லூரியில் படித்த நாள்களில் அவர் எடுத்த ஒரு குறும்படமும் (Shades of the Lake), அவருடைய தீசிஸ் பணிக்காக அவர் எடுத்திருந்த 43 நிமிட படமும்தான் (Fine Line) அவருடைய அடையாள அட்டைகள். கூடவே பல சினிமா ஸ்கிரிப்டுகளையும் எழுதினார்.
லீயின் மனைவி ஜேன் ஒரு பயாலஜிஸ்ட். அவருடைய சுமாரான வருமானத்தில் குடும்பம் மூச்சுத் திணறியபடி ஓடிக்கொண்டிருந்தது. இதில் இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் வேறு வந்து சேர்ந்திருந்தார்கள். ஜேன் இல்லாத நேரத்தில் வீட்டைப் பார்த்துக்கொள்வார். வீட்டில் அமர்ந்து கதைகளை யோசிப்பார். ஸ்கிரிப்ட் எழுதுவார். குழந்தைகளைப் பார்த்துக்கொள்வார். சமைப்பார். துணி துவைப்பார். ஆறாவது ஆண்டு நடக்கும்போது மெல்ல மெல்ல மனதளவில் உடைந்துபோயிருந்தார் லீ. அவர் ஏறி இறங்கிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாமே அவருடைய ஸ்கிரிப்டை எடுத்துப் பார்க்காமலேயே நிராகரித்தன. ஒன்று, இரண்டல்ல… 30 நிறுவனங்கள் உதட்டைப் பிதுக்கி, அவரைத் திருப்பி அனுப்பின. அப்போது அவருக்கு சரியாக 30 வயது. 30 வயதில் ஒரு மனிதன் சுயமாக, திடமாக வாழ்க்கையில் நிலைபெற்று நின்றுவிட வேண்டும்’ என்பது சீனர்களின் லட்சியம். ஒரு கட்டத்தில் மிகவும் மனமொடிந்துபோனார் லீ. அவருடைய ஒரே துணை மனைவி ஜேன். அவர் கொண்டு வரும் வருமானத்தில் எத்தனை காலம்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும்... பிள்ளைகள் வேறு வளர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இனி சினிமாவுக்குத் தலைமுழுக வேண்டியதுதான். இது நமக்கு லாயக்கல்ல’ என்று முடிவெடுத்தார். எதிர்காலம் எதில் என்று பார்த்தார். இனி கம்ப்யூட்டர்தான் எதிர்காலம். அன்றைக்கே ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸில் சேர முடிவெடுத்து, அதற்கான விண்ணப்பத்தையும் பூர்த்திசெய்து வைத்திருந்தார். அன்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ஜேன் லின், லீ எழுதி வைத்திருந்த விண்ணப்பத்தைப் பார்த்தார். ஆனால், ஒன்றும் சொல்லவில்லை.